எக்ஸ்பிரஸ் செய்திகள்சினிமா செய்திகள்

‘கூலி’ பட டிக்கெட் கட்டணம் ரூ.500: தியேட்டர்களுக்கு தரப்படும் அழுத்தம்!

Spread the love

ரஜினி நடித்துள்ள, ‘கூலி’ திரைப்பட டிக்கெட் கட்டணம், அரசு நிர்ணயித்ததை விட பல மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

ரஜினி, அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள, ‘கூலி’ படம், ஆக.14ம் தேதி, தமிழ் உட்பட நான்கு மொழிகளில் வெளியாகிறது. தமிழகத்தில் மட்டும், 750 தியேட்டர்களுக்கு மேல், இப்படம் வெளியாகிறது.

அதேபோல், 37 ஆண்டுகளுக்கு பின், ரஜினி படத்திற்கு, ‘ஏ’ சான்று தரப்பட்டுள்ளது. இதனால், தியேட்டருக்கு சிறுவர், சிறுமியர் வருகையும், குடும்பத்துடன் படம் பார்க்க வருவோர் எண்ணிக்கையும் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், தமிழகத்தில், ‘கூலி’ பட டிக்கெட் விலை, வழக்கமான கட்டணத்தை தாண்டி, பல மடங்கு உயர்த்தி விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

படத்தின் பட்ஜெட் அதிகமானதோடு, ‘ஏ’ சான்றுடன் வெளியாவதால், அதை ஈடுகட்ட, டிக்கெட் கட்டணத்தை அதிகரித்து விற்க வேண்டும் என, தியேட்டர் உரிமையாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில், ‘கூலி’ படத்தின் முதல் நாள் காட்சிகளுக்கு, குறைந்தபட்ச டிக்கெட் விலையே, 500 ரூபாயாக உள்ளது. வழக்கமாக சாதாரண தியேட்டரில் 130 – 160 ரூபாய் மட்டுமே கட்டணம் பெற வேண்டும். அதேபோல், ‘மல்டி பிளக்ஸ்’ தியேட்டரில் கட்டணம் 190 ரூபாயாகவும் இருக்க வேண்டும் என்பது, அரசு வெளியிட்டுள்ள ஆணை.

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கக் கூடாது என, ஏற்கனவே உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ‘கூலி’ படத்திற்கு ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிப்பது, நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்க விடுவதாக உள்ளது.

இச்சூழலில், ‘கூலி’ படத்தின் முன்பதிவு, நேற்று முன்தினம் தொடங்கியது. தமிழகத்தில் அதிகபட்சமாக, 190 ரூபாய் கட்டணம் என, ‘ஆன்லைன்’ முன்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கர்நாடகாவில் தமிழில் வெளியாகும் ‘கூலி’ படத்திற்கு அதிகபட்சம், 1000 ரூபாய் டிக்கெட் விலை என, ஆன்லைன் முன்பதிவிலேயே குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது:

தமிழகத்தில், ‘கூலி’ படம், 1000 தியேட்டர்களில் வெளியாக வாய்ப்புள்ளது. இங்கு அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் வசூலிப்பதில்லை. ஆனால், ரசிகர்களுக்கான காட்சியில், ஒரு சில தியேட்டரில் அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்பட்டிருக்கலாம். 90 சதவீத தியேட்டர்களில், ரசிகர்கள் காட்சி கிடையாது.

கர்நாடகாவில், எவ்வளவு வேண்டுமோ, அதை அவர்களே நிர்ணயிக்கலாம். தமிழகத்தில் அந்த அனுமதி கிடையாது. இங்கு ஒரு சில தியேட்டர்களில், அதிக கட்டணம் இருக்கலாம்; இல்லை என சொல்ல மாட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க செயலர் ஸ்ரீதர் கூறுகையில், ”அதிக கட்டணம் வசூலிக்க வேண்டும் என, எந்த அழுத்தமும் இல்லை. பொதுவாக பெரிய நடிகர்களின் படம் என்றாலே, இதுபோன்ற விஷயங்கள் பேசப்படுவது வாடிக்கை,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *